முல்லைப்பாட்டு

 

முல்லைப்பாட்டு


பாடியவர்:- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- முல்லைத்திணை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 103


சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.

முகிலானது, அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும், திருமகளை அணைத்தனவுமாகிய வலிமையான கையை உடையவனும், மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல், ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல் நீரைப் பருகி வலப் பக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு, விரைந்து சென்று, பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.

 பெருமுது பெண்டிர் விரிச்சிகேட்டல்

அரிய காவலுடைய பழைய ஊர் அருகில் போய், யாழ் இசையைப் போன்று வண்டுகள் ஆரவாரிக்க, நாழியில் நெல்லுடன் கொண்ட நறுமணமான மலர்களையுடைய முல்லைக் கொடியின் அரும்புகளில் புதிதாக மலரும் பூக்களைச் சிதறி, கடவுளைக் கையாலே தொழுது, வயதில் முதிர்ந்த பெண்கள் நற்சொல்லுக்காகக் காத்து நின்றனர்.

தலைவியைத் தேற்றுதல்

சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளம் கன்றின் வருந்தி சுழல்கின்ற தன்மையைப் பார்த்த ஆயர் பெண், குளிரால் நடுங்கும் தன் தோளின் மேல் கையைக் கட்டி , அங்கு இருக்கும் கன்றுகளிடம் “கோவலர்கள் கொடிய கோலால் பின்னின்று செலுத்த, இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள்” என்றாள். அதைக் கேட்ட பெண் ஒருத்தி கூறினாள், “மிகவும் நல்ல சொற்களை நாங்கள் கேட்டோம். பகைவர்களின் நிலத்தைக் கவர்ந்துக் கொண்டு, அவர்களின் திறையைப் பெற்று, போர்த்தொழிலை முடித்து வருவான் உன் தலைவன். இது உண்மை. உன் மனத்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்குவாயாக, கருமை நிறமுடையவளே!”. இவ்வாறு எடுத்துக் காட்டியும் அரசி ஆறுதல் அடையவில்லை. மிகவும் கலங்கி, தன் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைக் கொட்டினாள்.

பாசறைஅமைத்தல்

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டு இடத்தில் தொலைவில் மணக்கும் மலர்களையுடைய பிடவச் செடியுடன் ஏனைய பசுமையான புதர்களையும் வெட்டி, வேட்டுவரின் சிறிய வாயிலையுடைய அரணை அழித்து, முட்களை இட்டு மதில் கட்டி, திரை ஒலிக்கின்ற கடல் போன்ற அகன்ற பாசறையைக் கட்டினார்கள் மன்னனின் படை மறவர்கள்.

ஆடையைக் காவிக்கல்லில் தோய்த்து உடுத்தும், விரதங்களைச் செய்யும் பார்ப்பான் முக்கோலில் உடையினை தொங்க வைத்ததைப் போல், நல்ல போரில் புறமுதுகு காட்டி ஓடாமைக்கு காரணமான வலிமையான வில்லைக் குத்தி, அவற்றிலே தூணிகளைத் தொங்கவிட்டு, கூடமாகக் தூண்களை நட்டி, கயிற்றை இழுத்துக் கட்டின இடத்தில், பூ வேலைப்பாடு உடைய கை வேல்களை ஊன்றிக் கேடயத்தைப் பிணித்து, இயற்றப்பட்ட வளைந்த வில்லாகிய அரணே காவலாக, அமைந்த வேறு பல பெரும்படைகளுக்கு நடுவில், வேறு நீண்ட குத்துக் கோல்களை நட்டி பல நிறங்களுடைய திரைச் சீலையால் பகுதிகளாகப் பிரித்தனர்.

 

முன் கையில் சிறிய வளையல்களையும், அழகிய சிறிய முதுகில் கூந்தல் அசைந்து கிடப்பதையும் உடைய மகளிர், இரவைப் பகலாக்கும் ஒளியுடைய திண்ணிய கைப்பிடியுடைய வாளினை, கலந்த நிறத்தையுடைய வரிந்து கட்டிய கச்சிலில் அணிந்திருந்தனர். அவர்கள் எண்ணையை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்களாக, பாவை விளக்கின் கையில் உள்ள அகலில் உள்ள நீண்ட திரியைக் கொளுத்தி, அவற்றில் தீ அணையும் பொழுதெல்லாம் மீண்டும் கொளுத்தினர்.

 

நீண்ட நாக்கினையுடைய ஒளியுடைய மணிகளின் ஓசை குறைந்த நடு இரவில், மலர்களையுடைய ஆடும் அதிரல் கொடிகளும் புதர்களும் நீர்த் துவலையோடு வீசும் காற்றிற்கு அசைந்தாற்போல், தலைப்பாகைக் கட்டிய, உடம்பைப் போர்த்திய, நல்ல ஒழுக்கத்தையுடைய, காவல் பணியைப் புரியும் மிகுந்த வயதானவர் அசைந்தார்.

நாற்சந்தியில் யானைகளை நிற்க வைத்தல்

தழையால் வேயப்பட்ட கூரையுடைய ஒழுங்கான தெருவில், நாற்சந்தியின் முற்றத்தில், காவலாக, மதம் பாய்கின்ற கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை ஒன்று நின்றது. உயர்ந்து வளர்ந்த கரும்பும், அதிமதுரமும், மற்றும் வயலில் விளைந்த நெற்கதிரும் நெருக்கமாகச் சேர்த்து கட்டப்பட்ட இவற்றை உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவி, தன் தும்பிக்கையைத் தந்தங்களின் மீது வைத்தது. பிளவுபட்ட கூர்மையான கருவியைத் தன் கையில் கொண்ட வட மொழியை கற்காத இளைஞன் யானையிடம் வடமொழிச் சொற்கள் சிலவற்றைக் கூறி உணவுக் கவளங்களைக் கையில் கொடுத்தான்.

 

 

நாழிகையை அளந்து அறியும் பொய்க்காதவர்கள், மன்னனை வணங்கி, கூப்பிய கையினராகத் தோன்றி, அவனை வாழ்த்தி, “மோதும் அலைகளையுடைய கடலால் சூழ்ந்த உலகத்தை வெல்வதற்கு செல்பவனே! சிறிய அளவில் நீர் உள்ள உன்னுடைய வட்டிலில் இன்ன நேரம்” என்று சொல்ல,

 

குதிரைச் சவுக்கை வளைத்து மடங்கிப் புடைத்து நெருக்கமாகக் கட்டின சட்டையையும், அச்சம் தோன்றுவதற்குக் காரணமான தோற்றத்தையும், வலிமையான உடலையும் உடைய கொடூரமான கிரேக்கர்கள் புலிச் சங்கிலியைத் தொங்கவிட்ட நல்ல இல்லத்தில் அழகான மணியைப் போன்ற விளக்கை எரிய வைத்து,

மிலேச்சர் காவல்

உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்து, இரண்டாக்கிய அறையினுள்ளும் உள் அறையாகிய பள்ளியறையின்கண் சட்டை அணிந்த ஊமை மிலேச்சர் காவலாக அருகில் இருக்க,

மன்னனின் சிந்தனை

மன்னன் போரினை விரும்புவதால், உறக்கம் பெறாமல், பலவற்றை எண்ணினான். பகைவர்கள் எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால் பெண் யானைகளை மறந்த தன் ஆண் யானைகளைப்பற்றி எண்ணினான். யானைகளின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுப்பட்டுப் பாம்பு துடித்தாற்போல் விழுந்த போரில், தேன் பாயும் வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி செஞ்சோற்றுக் கடனுக்காக அழிந்த தன் மறவர்களை எண்ணினான். உடம்புக்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததாலே தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் தன் குதிரைகளைப்பற்றி நினைத்தான். ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்து, ஒரு கையைத் தலையுடன் கடகம் சேரும்படி வைத்து, நீண்ட நேரம் நினைத்தான்.

பகைவரைக் குறித்து வாளைக் கொண்ட தன்னுடைய வலிய கையினால் வெட்டி வென்று, ஒளியுடைய வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி, பகை அரசரை நடுங்கச் செய்யும் முரசு முழங்கும் பாசறையில், இனிமையாக உறங்குபவனைக்,

 

காணாதவளாய், துன்புற்று, தலைவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைவு இல்லாத தனிமையுடன் நீண்ட நேரம் நினைத்து, தன்னைத் தேற்றியும் வழுக்கி ஓடும் தன்னுடைய வளையல்களை ஓடாமல் நிறுத்தியும், பெருமூச்சு விட்டும், அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கி, அணிகலன் நெகிழ்ந்து, பாவை விளக்கில் பருத்த சுடர் எரிய, சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில், கூடல்வாய்களில் இருந்து விழும் பலவாக முழங்குகின்ற பெரிய திரண்ட அருவியின் இனிய இசையைக் கேட்டவாறு கிடந்தாள் அரசி. அவளுடைய காதுகள் நிரம்பும்படி இருந்தன ஒலிகள்.

வெற்றிமுழக்கமும் மன்னனின் வரவும்

வெற்றி அடைந்து, பகை அரசர்கள் விரும்பும் நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையுடன், வெற்றியால் உயர்த்தப்படும் வெற்றிக் கொடியை ஏற்றி, வெற்றிக்குப் பொருந்த ஊது கொம்பும் சங்கும் முழங்க,

நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்ட, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர, இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழை பெய்ததால் வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன் மென்மையான பெண் மான்கள் துள்ள, பெய்வதற்காக எதிரே செல்லும், வெண்ணிறமான மேகங்கள் பொழியும் திங்களில்,

முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் ஒழியும்படி, விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த, உயர்ந்த தேரில் பூட்டிய போர்த் தொழிலில் சிறந்த குதிரைகள் வந்தன.

கன்றைக் குணிலாக்கிக்கொண்டு எறிந்து விளாங்கனியை உதிர்த்தும், குன்றைக் குடையாக்கிப் பிடித்தும் நின்ற மாயவனே! ஆய்ச்சி விரிச்சி கேட்டுக்கொண்டு நின்றாளே, அவள் கெட்ட விரிச்சிச்சொல் நிறைவேறப்போவது என்றோ? நீயே அறிவாய்.

பகைவர் படையை வென்று அவர் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, தன் தேரில் பூட்டிய பொன்னணிக் குதிரையைத் தூண்டி ஓட்டிக்கொண்டு மீண்டு வருவதற்கு முன்பு கார்காலம் வந்துவிட்டது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

இலக்கியத்தில் பெண்கள்

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை