மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை
மணிமேகலை
ஆதிரை பிச்சையிட்ட காதை
சீத்தலைச் சாத்தனார்
முனைவர் ப.செல்வி
இணணப்பேராசிரியர் ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர்
கலை அறிவியல் கல்லூரி,கோவை
ஆதிரையின் செய்தியைக் கேள் என்று சொல்லிக்கொண்டு அறவண அடிகள் மணிமேலைக்குக்கூறுகிறார்.
சாதுவனின் தீ நடத்தையால் செல்த்தை
இழத்தல்
ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தகைமை இல்லாதவனாக ஆதிரையை விட்டுவிட்டுக் கணிகை ஒருத்தியோடு வாழ்ந்துகொண்டு வட்டாட்டத்திலும் சூதாட்டத்திலும் தன்னிடமிருந்த வானளாவிய செல்வத்தை இழந்துவிட்டான்.
சாதுவன் பொருளீட்டச் செல்லுதல்
அதனால் உறவினர்களும், அவனைப் பேணிவந்த கணிகையும் அவனைக் காசு இல்லாதவன் என்று கைவிட்டு விட்டனர். அதனால் வங்கக் கப்பலில் பொருளீட்டச் செல்லும் வணிகர்களுடன் சேர்ந்து பொருளீட்டும் ஆசையில் சென்றான்.
சாதுவன்சென்ற கப்பல் கவிழ்தல்
நள்ளிரவில் புயல் வந்து கப்பலைக் கவிழ்த்தது. அதில் ஒடிந்த மரத்துண்டுகளைப் பற்றிக்கொண்டு சிலர் உயிர் தப்பினர். சாதுவன் நாகர் இன மக்கள் வாழும் மலைக்கு வந்து சேர்ந்து அந்த மலைமக்களோடு ஒன்றிவிட்டான். ஒடிந்த மரத் துண்டுகளைப் பற்றிக்கொண்டு நாடு திரும்பியோர் சாதுவன் இறந்துவிட்டான் என்று ஆதிரைக்குக் கூறினர்.
அதனைக் கேட்ட ஆதிரை ஊர் மக்களைத் தீ மூட்டச் செய்து, "என் கணவன் சென்ற இடத்துக்கு நானும் செல்வேன்" என்று கூறிக்கொண்டு அதில் இறங்கினாள்.
அசரீரிவாக்கு
காய்ந்த விறகில் பற்றி எரிந்த அந்தத் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்தியிருந்த ஆடையிலும் தீ பற்றவில்லை. அவள் மேனியில் இருந்த சந்தனம், கூந்தலில் சூடியிருந்த பூ ஆகியனவும் மாறாமல் இருந்தன. தீ தாமரை போலவும், ஆதிரை தாமரையில் நிற்கும் திருமகள் போலவும் காணப்பட்டன.
தீயும் என்னை ஏற்றுக்கொள்ளாத அளவுக்குத் தீவினை செய்தவள் ஆகிவின்னேனே என்று சொல்லிக்கொண்டு அழுதாள். ஆதிரைக்கு அசரீரி வாக்கு கேட்டது.
உன் கணவன் பிழைத்துப்போய் ஆடையின்றி நடமாடும் நாகர் மக்கள் வாழும் மலையை அடைந்திருக்கிறான். பல ஆண்டுகள் அங்குத் தங்கியிருக்க மாட்டான். சந்திர தத்தன் என்னும் வணிகனின் கப்பலில் வந்து சேர்வான். - என்பது அந்த அசரீரிவாக்கு.
ஆதிரை புண்ணியச் செயல்கள் செய்தல்
ஆதிரை அழுகைத் துயரம் நீங்கி, பொய்கையில் நீராடிவிட்டு வருபவள் போல இல்லம் வந்தடைந்தாள். கண்மணி போன்ற என் கணவன் விரைந்து வந்து சேரவேண்டும் என்று புண்ணியச் செயல்கள் பல செய்தாள். இதனைப் பார்த்து, மழை பொழியச் செய்யும் கற்பினை உடைய பத்தினிப் பெண்டிரும் இவளைத் தொழுதனர்.
நாகமலையின் மர நிழலில் சாதுவன் உறங்குதல்
ஆதிரையின் கணவன் நாகமலையின் மர நிழல் ஒன்றில் கடலில் ஒடிமரம் பற்றி நீந்தி வந்த களைப்பால் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது அந்த மலையில் ஆடையின்றித் திரியும் நக்க சாரணர் சிலர் இவன் தனியே வந்திருக்கிறான். வருந்தி உறங்குகிறான். நன்றாகக் கொழுத்திருக்கும் இவன் உடம்பு நமக்கு நல்ல உணவாகும் என்று சொல்லிக்கொண்டு எழுப்பினர்.
கொல்லவேண்டாமென்று நாகர்களிடம் வேண்டுதல்
சாதுவன் நாகர்களின் மொழியை நன்றாகக் கற்றவன். ஆதலால் கொடுந்தொழில் புரியும் அவர்களைத் தொழுது கொல்லவேண்டாமென்று வேண்டிக்கொண்டான். அதனைக் கேட்ட நாகர்கள் தம் குருமகனிடம் வருமாறு அழைத்துச் சென்றனர்.
காய்ச்சிய கள், மிகுந்த முடைநாற்றக் கவிச்சல், ஊனைத் தின்ற பின் குந்து கிடக்கும் வெள்ளெலும்புகள் ஆகியவற்றுக்கு இடையே, கரடி ஒன்று தன் பெண் கரடியுடன் வீற்றிருப்பது போல நாகர்களின் குரு வீற்றிருந்தான். அவனோடு சாதுவன் அவர்களின் மொழியில் பேசி அவர்களைக் கவர்ந்தான். பின்னர் குளிர்ந்த மரநிழலில் அனைவரும் வீற்றிருந்தனர்.
சாதுவன் கடலில் தனக்கு நேர்ந்த துன்பத்தை எடுத்துரைத்தல்
"இங்கு வந்த காரணம் என்ன" என்று குரு சாதுவனை வினவினான். சாதுவன் கடலில் தனக்கு நேர்ந்த துன்பத்தை எடுத்துரைத்தான். அதனைக் கேட்ட குரு பெரிதும் அவன்மீது இரக்கம் கொண்டு, தம் மக்களை அழைத்து "இவன் பெரிதும் வருத்தத்துடன் இருக்கிறான், ஆதலின் இந்த நம்பிக்கு, ஓர் இளம் பெண்ணையும், சூடான கள்ளும், உணவும் வேண்டுமளவுக்குத் தாருங்கள்" என்று கூறினான்.
அந்தச் சொற்களைக் கேட்ட சாதுவன், "விரும்பிச் சொன்ன உரையைக் கேட்டேன். அவற்றை நான் விரும்பவில்லை" என்றான். "பெண்ணும் உணவும் இல்லாமல் உலகிலுள்ள மக்கள் அடையும் பயன் வேறு உண்டோ, இருப்பின் சொல்வாயாக" என்று சினத்துடன் கூறினான்.
சாதுவன்நாகர் குருவிடம் விளக்கமாக் கூறுகிறான்.
மயக்கம் தரும் கள் உண்பதையும், வாழும் உயிர்களைக் கொல்வதையும் தெளிவு பெற்றபெருமக்கள். விலக்கியிருக்கின்றனர்.
மேலும்கேள். பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் விழிப்பதும் போன்றவை. நல்லறம் செய்வோர் நல்லுலகை அடைவர். அறம் அல்லாதனவற்றைச் செய்பவர் துன்பம் தரும் நரக உலகினை அடைவர்.
இந்த உணைமையை உணர்ந்து உள்ளத்தில் உரம் பெற்றவர் அறமல்லாத நெறிகளைக் கைவிட்டு வாழ்கின்றனர். இதனை கண்டுகொள்வாக என்று சாதுவன் கூறினான். இதனைக் கேட்ட நாகர் குரு சிரித்தான்.
உடம்பை விட்டு உயிர் ஓடும் நிலையை
உணர்த்துதல்
உடம்பை விட்டு ஓடும் உயிர் ஒரு உருவத்தைப் பற்றிக்கொண்டு ஓர் இடத்தில் வாழும் என்று எனக்கு இங்குச் சொல்கிறாய். அந்த உயிர் எவ்வாறு அங்குப் போய்ப் புகும்? தெளிவாக எடுத்து எனக்குச் சொல் என்று நாகர் குரு கேட்டான்.
"சினம் இல்லாமல் கேள்" என்று வேண்டிக்கொண்டு சாதுவன் விளக்குகிறான்.
உன் உடலில் உயிர் வாழும்போது, உனக்கு நேர்வதை எல்லாம் உன் உடல் உணர்ந்துகொள்ளும். மற்று அந்த உடம்பே உயிர் போய்விட்டால் நெருப்பிலிட்டுச் சுட்டாலும் அதனை உணராது. இதனால் உடம்பை விட்டு ஒன்று போய்விட்டது என்பதை நீ உணர்ந்துகொள்.
இங்கிருந்து போனது எதுவாயினும், எங்காவது இருக்கும் என்பதை நானா சொல்ல வேண்டும்? எல்லாருக்கும் தெரியுமே.
உடம்பு இங்கே இருக்கும்போது உணர்வு என்னும் உயிர் பல காவத தூரம் கடந்து செங்வதை நீ உன் கனவிலும் காணலாம்.
ஒருவர் இறந்த பின்னர் அப்படிச் செல்லும் உயிர் வேறொரு உடம்பில் புகுந்துகொள்ளும் என்பதை நீ புரிந்துகொள்.
நாகர் தலைவன் அறநெறியை வேண்டுதல்:
இவ்வாறு சாதுவன் கூறிய மொழிகளைக் கேட்ட நாகன் கள்ளுண்ட சிவந்த கண்களுடன் அவனை நோக்கி மேலும் வினவலானான்.
நல்லனவற்றை அறிந்த செட்டியின் காலடியில் விழுந்து நாகன் (நாகர் குரு, நாகர் தலைவன்)வினவலானான். கள்ளும், ஊனும் உண்ணுதலைக் கைவிடின் என்னால் உயிர் வாழ இயலாது. எனவே எனக்கு உகந்த வகையில் நல்ல அறநெறியை எடுத்துரைக்க வேண்டும் - என்று கேட்டுக்கொண்டான்.
நாகர் தலைவனுக்கு சாதுவனின் அறவுரை:
சாதுவன் சொல்கிறான். - நன்று சொன்னாய். இனி நீ நல்ல நெறியில் செல்வாயாக. உன்னால் செய்ய இயலக்கூடிய அறநெறியைச் சொல்கிறேன்.
பாய்மரக் கப்பல் உடைந்து இங்கு வரும் மக்களை அடித்துத் தின்னும் பழக்கத்தைக் கைவிட்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மூப்பால் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தின்னலாம். பிற உயிர்களைக் கொல்லும் தீய செயலை விட்டொழிக்க வேண்டும்.
இப்படிச் சொல்லக் கேட்ட சிறுமை குணமுடைய நாகன் கூறுகிறான். - இங்கே என்னால் செய்ய முடிந்த இந்த நல்லனவற்றைச் நான் செய்கிறேன். அங்கு உனக்குப் பயன்படும் பொருகளைத் தருகிறேன். பெற்றுக்கொள். - என்று கூறினான்.
நாகர் தலைவனின் மனமாற்றம்:
முன்பெல்லாம் கப்பல் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று தின்றோம் . அவர்களிடம் கைப்பற்றிய ஏராளமான பொருள்கள் இங்கு உள்ளன. மணம் மிக்க மரங்கள், மெல்லிய ஆடைகள், விழுமிய பணப்பொருள் முதலானவை அந்தச் செல்வங்கள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.
அவற்றை எடுத்துக்கொண்டு வந்து சந்திர தத்தன் என்பவனின் கப்பலில் ஏறிப் புகார் நகருக்குத் திரும்பினான். தன் மனைவி ஆதிரையுடன் சேர்ந்து நல்ல பல தானங்கள் செய்து வாழ்ந்து வருகிறான்.
ஆதிரை
அமுதசுரபியில் உணவிடல்:
காயசண்டிகை கூறிய ஆதிரை இப்படிப்பட்டவள். அப்படிப்பட்டவள் கையால், பெண்ணே, பிச்சை பெறுக என்று அறவண அடிகள் கூறினார்.
மணிமேகலை ஆதிரை மனைக்குச் சென்று முழுமை செய்யப்படாத ஓவியம் (sketch) போலநின்றாள். ஆதிரை மணிமேகலையைத் தொழுது வலமாகச் சுற்றிவந்து மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபி பாத்திரம் நிறையும்படி, இந்த உலகம் முழுவதும் பசிப்பிணியிலிருந்து நீங்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்தி உயிரைக் காக்கும் மருந்தாகிய உணவினை இட்டாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக