நாச்சியார் திருமொழி

 

முனைவர் ப.செல்வி,

இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை - 641044

நாச்சியார் திருமொழி

என் உயிர்த்தோழியே! எல்லா குணங்களிலும் பூர்ணனான ஸ்ரீமந்நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகிறான் என்று எதிரே பொன்னாலான பூர்ண கும்பங்களை வைத்து நகரம் முழுவதும்         தோரணங்களை நாட்ட, இவற்றை எல்லாம் நான் என் கனவில் அனுபவித்தேன்.

தோழீ! நாளை திருமணம் என்று நிர்ணயித்து, பாளைகளோடு கூடிய பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை உடைய திருமணப் பந்தலின் கீழே நரஸிம்ஹன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஒரு இளைஞன் வருவதை என் கனவில் கண்டு அனுபவித்தேன்.

தோழீ! இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரும், இங்கே வந்து இருந்து என்னை மணப்பெண்ணணாகப் பேசி, தேவையான ஏற்பாடுகளை ஆலோசித்து, துர்க்கை என்கிற என்னுடைய நாத்தனார் (கணவனின் சகோதரி) கல்யாணப் புடவையை நான் உடுத்தும்படி செய்து, நறுமணம் மிகுந்த மாலைகளையும் சூட்டும்படி நான் கனாக் கண்டேன்.

தோழீபெரியோர்களான பல அந்தனர்கள் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து உயர்ந்த ஸ்வரத்தில் மங்களங்களைச் சொல்லிப் பூக்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்தவனான பரம பவித்ரனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துக் காப்புக் கயிறைக் கட்டுவதை நான் கனாக் கண்டேன்.

தோழீ! அழகிய இளம் பெண்கள் கதிரவனுடைய ஒளி போன்று பிரகாசிக்கும் மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் (பூர்ணகும்பம்) கையில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் எம்பெருமான் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி முழுவதும் அதிரும்படி எழுந்தருளியதை நான் கனாக் கண்டேன்.

தோழீ! மத்தளங்கள் கொட்டவும், ரேகைகளை உடைய சங்குகள் நீண்ட நேரம் ஊதவும் என்னை மணம் புரியும் மைத்துனன் (அத்தை மகன்) முறையை உடைய குண பூர்த்தியை உடைய மதுசூதனன் எம்பெருமான், முத்துக்களை உடைய மாலை அலங்காரங்கள் தொங்கும் பந்தலின் கீழே வந்து என் கையைப்பற்றி  வலம் வர நான் கனாக் கண்டேன்.

 

தோழீ! நன்கு கற்றுத் தேர்ந்த வைதிகர்கள் சிறந்த வேத வாக்யங்களை உச்சரித்து தகுந்த மந்த்ரங்களைக் கொண்டு, பசுமையான இலைகளுடன் கூடிய நாணற்புல்லைப் பரப்பி வைத்து (சுள்ளிகள்) கொண்டு, பெரும் கோபத்தையுடைய மதயானைபோலே செருக்கை உடைய கண்ணன் எம்பெருமான் என் கையைப் பிடித்துக்கொண்டு அக்னியை வலம் வந்ததை நான் கனாக் கண்டேன்.

தோழீ! இப்பிறவிக்கும் மேலுள்ள எல்லா பிறவிகளுக்கும் புகலிடமாய் இருப்பவனாய், நமக்குத் தலைவனாய், எல்லாக் கல்யாண குணங்களிலும் பூர்ணனாய் நாராயணனான கண்ணன் எம்பெருமான் தனது (அடியார்கள் காலையும் பிடிக்கும்) சிறப்புவாய்ந்த திருக்கையால் எனது காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்துவைப்பதை நான் கனாக் கண்டேன்.

தோழீ! அழகிய வில்லைப்போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடையவர்களான எனது அண்ணன்கள் வந்து அக்னியை நன்றாக வளர்த்து அங்கே அக்னியின் முன்பு என்னை நிறுத்தி சிங்கம்போன்ற திருமுகத்தைக்கொண்ட அச்சுதன் எம்பெருமானுடைய திருக்கையின்மேலே என்னுடைய கையை வைத்து பொரிகளை அள்ளிப் பரிமாறியதை நான் கனாக் கண்டேன்.

.

தோழீ! குங்குமத்தை உடம்பெல்லாம் பூசி குளிர்ந்த சந்தனத்தையும் நன்றாகத் தடவி, அங்குள்ள ஆனையின் மேலே எம்பெருமானுடன் சேர்ந்திருந்து அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே ஊர்வலம் வந்து வாஸனை ஊட்டப்பட்ட நீரினால் எங்கள் இருவரையும் திருமஞ்சனம் பண்ணுவதை நான் கனாக் கண்டேன்.

அந்தணர் குலத்தவரால் புகழப்பட்டவராய் (அதனால் நம்பத்தகுந்தவராய் இருக்கும்) ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் (நான்) தான் கண்ணன் எம்பெருமானைக் கைப்பிடித்ததைக் கனவில் கண்டபடி அருளிச்செய்த பரிசுத்தமான இந்தத் தமிழ் மாலையான பத்துப் பாசுரங்களையும் நன்றாகச் சொல்ல வல்லவர்கள் பெரியாழ்வாரைப்போலே ஈடுபட்டிருக்கும் நல்ல குணங்கள் அமைந்த உயர்ந்த பிள்ளைகளைப் பெற்று ஆனந்தத்தை அடைவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்