எங்கள் தாய் - பாரதியார்
முனைவர் ப.செல்வி,
எங்கள் தாய்
முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய்.
எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பாள் எங்கள் தாய்.
முப்பது கோடி மக்களை உடையவள் - தற்போது நூறு கோடிக்கும் மேலாகச் சென்றுவிட்டது - ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக உடையவள். இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள்.
இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்
அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்களையும் நடத்துகிறாள் எங்கள் தாய். தன்னை அழிக்க விரும்பி யாராவது வந்தால் அவர்களை தூள் தூளாக்கி ஒழித்துவிடுவாள் எங்கள் தாய்.
பூமியை விட பொறுமையில் சிறந்தவள். பெரும் புண்ணியம் செய்யும் மனத்தை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் அவளுக்குக் குற்றம் இழைப்பவர் முன் நிற்கும் கரிய கொடிய துர்க்கையைப் போன்றவள் எங்கள் தாய்.
கற்றைச் சடையையும் நிலவையும் தலையில் வைத்திருக்கும் துறவியாம் சிவபெருமானைக் கைதொழுவாள் எங்கள் தாய். கையில் தன்னிகரில்லா ஆயுதமாம் சக்கரத்தை வைத்திருக்கும் ஒருவனாம் பெருமாளையும் தொழுவாள்
யோகங்களிலே நிகரில்லாதவள். உண்மையாம் இறை ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். உயர்ந்த போகங்களிலேயும் நிறைவுடையவள். எண்ணி மாளா பொற்குவை செல்வங்கள் உடையவள்
நல்லறம் நாடிய மன்னர்களை வாழ்த்தி நல்லதைப் புரிவாள் எங்கள் தாய். அவர்கள் கெட்டவர்கள் ஆயின் அவர்களை அழித்துப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்.
வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகளாம் எங்கள் தாய். அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறையாத திண்மையுடையவள்; தினமும் மேன்மேலும் சீர்களைப் பெறுவாள் எங்கள் தாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக