காளமேகப்புலவர் பாடல்கள்

 

முனைவர் ப.செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை - 641044

 

காளமேகப்புலவர் பாடல்கள்

காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் பொழிவதைப் போன்று இயல்பாக விரைந்து கவிபாட வல்லவர். சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பாடும் திறம் மிக்கவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு திருவானைக்கா உலா, பரபிரம்ம விளக்கம் சமுத்திர விலாசம் . சித்திர மடல் போன்ற சிற்றிலக்கியங்களையும் 220 தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் உள்ள ஒற்றுமை

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்

அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்

தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம்.

பாம்பு 

பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் 

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

நாய்க்கும் தேங்காய்க்கும்  உள்ள ஒற்றுமை

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே

தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயுமெனச் செப்பு .

நாய்

நாயானது ஓடும். இருக்கும். அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குலைத்து வருவருவதற்கு வெட்கப்படாது.

தேங்காய்

தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.

 

குதிரைக்கும் காவிரியாற்றுக்கும்  உள்ள ஒற்றுமை

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்

தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்

ஆடுபரி காவிரி யாமே.

குதிரை

குதிரை – ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு

காவிரி ஆறு நீராய் ஓடும். நீர்ச்சுழி இருக்கும். நீர் சுத்தம் ஆகும். தன்னைத் துன்னும் அலரைச் சாடும் (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும்). மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்