பூசலாரின் பக்திச் சிறப்பு
பூசலாரின் பக்திச் சிறப்பு
முன்னுரை:
செயற்கரிய செயல்களைச் செய்த சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் பெரியபுராணம். இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார்.அவர் இந்நூலுக்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். சைவ சமய நூல்களில் பன்னிரண்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியே பூசலார் நாயனார் புராணம் . இப்பகுதியில் பூசலார் சிவனிடத்தில் கொண்ட பக்தியைப் பற்றிக் காணலாம்.
பூசலாரின் பக்திச் சிறப்பு:
கோடி கோடியாய்க் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை.
அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான்.
இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.
திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார்.
எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை.
இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி கோயில் பணிகளை மேற்கொண்டார்.
மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது.
கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்குக் குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.
இதே நேரத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்குக் கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தைக் கட்டியிருந்தான்.
பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.
குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான்.
குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.
மன்னன் இந்நிகழ்வால் ஆவலோடு திருநின்றவூருக்குச் சென்றார்.அங்கு சென்று பூசலாரை சந்தித்து அவரின் உள்ளத்தில் எழுந்தருளிய கோயிலைப் பற்றி அறிந்து கொண்டு தான் கண்ட கனவையும் பூசலாரிடம் உரைத்தான்.
இதனை அறிந்த பூசலார் மெய்சிலிர்த்துப் போனார் .இறைவனே தனக்காக மனக்கோவிலில் எழுந்தருளியுள்ளதை நினைத்து அவர் பூரித்தார்.
முடிவுரை:
பூசலார் இறைவனிடம் கொண்ட பக்தியினால் தன் மனதில் கட்டிய இக்கோவிலைப் பற்றிய நிகழ்வு பூசலாரின் பக்திக்கு சிறந்த சான்றாகும்.கோடி கோடியாய்க் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை.அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான் என்பது தெளிவாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக