அகநானுறு – 34 மருதன் இளநாகனார் பாடல்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
அகநானுறு – 34 மதுரை மருதன் இளநாகனார் பாடல்
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
சிறிய கரிய பிடாவின், வெள்ளிய உச்சியினையுடைய குறிய புதர், மாலை போல மலரும், குளிர்ந்த நறிய முல்லை நிலத்தில், செருப்பு அணிந்த தானையுடைய வேட்டுவன், கவைக் கோலைச் சுமந்தாலொத்த, பெரிய முறுக்குடைய கோட்டினையுடைய, பெருமை தங்கிய ஆண்மான்கள், நெருங்கிய இலைகளையுடைய அறுகினது சிறந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை, மறிவிளையாடும் பக்கத்தினை யுடைய இளைய பெண்யானை அருந்தச் செய்த, தெளிந்த அறல்நீர் தழுவிச் செல்லும் நெடிய மணல் சார்ந்த கரைகளில், அசைவிடும் கவுளினை யுடையவாய், அவை துயிலும் இடத்தைக் காவல் செய்திருக்கும், பெருந்தன்மையினைக் கண்டு அவை போலத் தலையளி செய்திலமே என்று தளர்ந்த நெஞ்சம் இன்பம் அடையவும்;
ஆடைகளிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினைக் கரைத்து விடும் மெல்லிய விரல்களையும், பெரிய தோள்களையும் உடைய ஆடை ஒலிப்பவள், அக் கஞ்சிப் பசையினைத் துறையில் அலசி விடுவது போன்ற, தூய மயிரினையுடைய அன்னங்கள், தம் பெடைகளுடன் விளையாடி மகிழும், காவல் பொருந்திய மனை எல்லைக்குள், சிவந்த மாலை யணிந்தது போன்ற கழுத்தினையுடைய பசிய கிளியினை, தனது முன் கையில் ஏந்தி, இல்லில் உள்ளார் அறிந்து விடுவரோ என அஞ்சி, மென்மையாக, திறத்து ஒன்று உரைப்பையாயின் அவர் இன்று வருவார் என உரைப்பாய் என்று, மழலையாகிய இனிய சொற்களைப் பயில்வித்திருக்கும், நாணம் மிக்க நம் தலைவியது மாண்புற்ற நலத்தினை அடையவும்; தேரைச் செலுத்தம் நற்றிறம் வாய்ந்த பாகனே! நம் தேர் விரைந்து செல்வதாக.
கருத்துகள்
கருத்துரையிடுக