நாண்மணிக் கடிகை
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
நாண்மணிக் கடிகை
வீடுபேறு அடைய
அறம் செய்ய வேண்டும்
நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்
தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்
ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்.
உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும்
குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.
அகத்தின்
அழகு முகத்தில் தெரியும்
மலரிருக்கும் இடத்தை அதன் மணம் உணர்த்தும். ஒருவன் செயல்திறனை அவனது சொற்கள் உணர்த்திவிடும். ஆராய்ந்து பார்த்தால் மனதில் பொதிந்த தீமையை அவன் மனம் அறிவிக்கும் முன்பே முகம் அறிவிப்பது போல் வேறு எதுவும் அறிவிக்காது.
கற்றான் இளமை பாராட்டும் உலகு
விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.
குலத்தொழுக்கமும் கல்லாமையால் கெடும்
அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்துயர்வும், குலத்தொழுக்கமும் கல்லாமையால் கெடும். நீர் வருவாயற்ற ஏரியின் கீழ் விளையும் நெற்பயிர் கருகிப் போகும். சுமக்க முடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் இறக்கும்.
தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவன்
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு கணவனறியாது கற்புக்கேடாக ஒழுகுபவள் கணவனுக்குக் கூற்றுவனாவாள்.
உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்
இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம். செல்வ வளம் இல்லாதபோழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போழ்து பிறரைச் சினத்தல் குற்றம். உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.
கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் கீழ்மையைக் காட்டிவிடுவர்
அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.
கல்விக்கு
அழகு மெய்யுணர்வு
வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.
கருத்துகள்
கருத்துரையிடுக